விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகளை காவல்துறையைக் கொண்டு வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் விவசாய விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு:

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் கோவையிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனஹொந்தி வரை 340 கிலோ மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. இதில், இருகூரில் இருந்து முத்தூர் வரையிலான 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டும் விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரின் மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள தவெக அரசின் அதிகாரப்போக்கு கண்டிக்கத்தக்கது.

விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் அமைக்கப்படுவதால், நிலத்தின் பயன்பாடு, நிலத்தடி நீர் மற்றும் விவசாய உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். விவசாயிகளின் இந்த நியாயமான குரலுக்குச் செவிசாய்க்க மறுத்து, அவர்களின் போராட்டத்தை ஒடுக்க தவெக அரசு கையாண்டிருக்கும் அடக்குமுறை, ஆணவம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகும்.

கடந்த ஆட்சிக்காலங்களில் இதே திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தவெக அரசு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில், காவல்துறை உதவியுடன் விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பறிக்க முற்படுவது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும்.

எனவே, வாழ்வாதாரத்திற்காகப் போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்து உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கையின்படி சாலையோரமாகவோ அல்லது நெடுஞ்சாலைகளின் ஓரமாகவோ எண்ணெய் குழாய்களைப் பதிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.