சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை எளிதாக்கிவரும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 1,06,37,647 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதிகபட்சமாக கடந்த ஜூலை 24 அன்று ஒரே நாளில் மட்டும் 3,84,412 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் பயணிகள் பல்வேறு டிஜிட்டல் மற்றும் நவீன பயணச்சீட்டு முறைகளைப் பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர்:
-
சிங்கார சென்னை அட்டை (தேசிய பொது இயக்க அட்டை): 55,87,494 பயணிகள்
-
க்யுஆர் குறியீடு (QR) பயணச்சீட்டு முறைகள்: ஆன்லைன் கியுஆர், வாட்ஸ்அப், பேடிஎம், ஓஎன்டிசி (ONDC), போன்பே, சென்னை ஒன் செயலி உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் முறைகள் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
20% கட்டணத் தள்ளுபடி: சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், டிஜிட்டல் முறை மற்றும் சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்திப் பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் 20 சதவீத கட்டணத் தள்ளுபடியை வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் (+91 83000 86000), பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை அட்டை போன்ற டிஜிட்டல் முறைகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும். இருப்பினும், மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்களில் நேரடியாக வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித கியுஆர் பயணச்சீட்டுகளுக்கு இந்தத் தள்ளுபடி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் நிலையங்களைப் பாதுகாப்பதிலும், பராமரிப்பதில் தொடர் ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்துப் பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.