பௌத்தர்கள் புனிதப் பயணம்: அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு தகவல்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்துகொண்டு திரும்பும் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000/- வரை மானியம் வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2026-ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடமிருந்து தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்கள்: இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பௌத்தர்கள் தங்களுக்கான விண்ணப்பப் படிவங்களைச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து எந்தவிதக் கட்டணமுமின்றி நேரில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், அரசு அதிகாரப்பூர்வ இணையதளமான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை என்ற தளத்திலிருந்தும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாளும் அனுப்ப வேண்டிய முகவரியும்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து அனுப்புவதற்கான கடைசி நாள் 15.11.2026 ஆகும். இந்த நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி விவரம்:

ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005.

இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தித் தமிழகத்தைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமி புனிதப் பயணத்திற்கு மானியம் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.