நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சக்கராம்பாளையம் பகுதியில், தனியார் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் 4 மாணவிகள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் சுபிதா கலைச்செல்வி (19), நிவேதா (17), தனுஸ்ரீ (13), அபிநயா (12) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் சுபிதா, நிவேதா, தனுஸ்ரீ ஆகியோர் சகோதரிகள்; அபிநயா அவர்களது உறவினர்.

சுபிதா கல்லூரியில் படித்து வந்தார். பள்ளியில் படித்து வந்த தனது இரு சகோதரிகளையும், அவர்களுடன் வந்த அபிநயாவையும் அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

சக்கராம்பாளையம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, ராசிபுரம்–திருச்செங்கோடு சாலையில் வந்த தனியார் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியதாக போலீஸ் தெரிவித்துள்ளது. மோதலின் தாக்கத்தில் மாணவிகள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், சுபிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தமிழக அரசு வெளியிட்ட இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் சக்கராம்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.