தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது ஏற்பட்ட அமளி மற்றும் திமுக வெளிநடப்பு குறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் காவல்துறை மானியக் கோரிக்கைக்கு சுமார் 53 நிமிடங்கள் பதிலுரை வழங்கியதாக குறிப்பிட்ட தமிமுன் அன்சாரி, முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சியை குறித்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் அதற்கு பதிலளிக்க முயல்வது இயல்பானது என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், அவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படாததை தமிமுன் அன்சாரி விமர்சித்தார்.

“முதலமைச்சரே திமுக உறுப்பினர்களை பேச அனுமதிக்குமாறு கேட்டபிறகும், சபாநாயகர் அனுமதி மறுத்தது ஏற்கத்தக்கதல்ல. சபாநாயகருக்கு இவ்வளவு கோபம் வரலாமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவை என்பது ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கருத்துகளை முன்வைத்து விவாதிக்கும் இடம் என்றும், பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போல ஒருதரப்பு குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைத்து மற்றவர்களுக்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இன்றைய பேரவை நிகழ்வுகள் குறித்து பேசிய தமிமுன் அன்சாரி, அவையின் மாண்பு மற்றும் ஜனநாயக மரபுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.