
கான்பூர், செப்டம்பர் 10: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பிரபல மருந்து வியாபாரி வினீத் மினோச்சா கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மருமகள் ஷாலு மினோச்சா மீது போலீசார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். குடும்பத்தில் பணம் மற்றும் தனியுரிமை தொடர்பான பிரச்சினைகளால் ஏற்பட்ட விரோதத்தின் பின்னணியில், முன்னாள் ஊழியரை பயன்படுத்தி மாமனாரைக் கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.
63 வயதான வினீத் மினோச்சா, கான்பூரின் கல்யாண்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் செப்டம்பர் 5 இரவு கொல்லப்பட்டார். உடலில் 26-க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக போலீஸ் மற்றும் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
போலீஸ் விசாரணையின்படி, ஷாலு தனது முன்னாள் வீட்டு ஊழியரான விஷால் கவுதம் மற்றும் அவரது கூட்டாளியை இந்தக் கொலையைச் செய்ய பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. விஷாலுக்கு ₹6 லட்சம் கொலை ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கான்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
CCTV-தான் காரணமா?
வினீத் மினோச்சா குடும்ப செலவுகளை கட்டுப்படுத்தியதாகவும், வீட்டில் நான்கு CCTV கேமராக்களை நிறுவியதாகவும் போலீஸ் கூறுகிறது. இதனால் தனது தனியுரிமை பாதிக்கப்பட்டதாக ஷாலு கருதியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிய செலவுகளுக்குக் கூட மாமனாரிடம் பணம் கேட்க வேண்டியிருந்ததாக அவர் கூறியதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை நடந்தபோது Party-யில்?
இந்த வழக்கில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவலாக, கொலை நடந்த நேரத்தில் ஷாலு தனது கணவர் சுப்ரத்துடன் கான்பூரில் உள்ள ஒரு lounge-ல் இருந்ததாக போலீஸ் கூறுகிறது. அங்கு அவர் நடனமாடும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
ஆனால் அதே நேரத்தில், கொலை செய்ய அனுப்பப்பட்டதாக கூறப்படும் நபர்களுடன் WhatsApp calls, messages மற்றும் voice calls மூலம் அவர் தொடர்பில் இருந்ததாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மூன்று திட்டங்கள்?
விசாரணையில், வினீத்தின் மரணத்தை முதலில் heart attack போல காட்டுவது, பின்னர் accident போல ஏற்படுத்துவது உள்ளிட்ட பல திட்டங்கள் முன்கூட்டியே யோசிக்கப்பட்டதாகவும், இறுதியில் நேரடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் சில செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.
கொலை சம்பவத்தில் கொள்ளை நோக்கம் தென்படவில்லை என்பது ஆரம்ப கட்டத்திலேயே போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் CCTV footage, phone call records மற்றும் தொடர்புடையவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலம் குடும்ப உறுப்பினரின் பங்கு குறித்து போலீசார் கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
ஷாலு மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது கணவர் சுப்ரத்தின் பங்கு இருந்ததா என்பதும் தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது.