காஞ்சிபுரம், செப்டம்பர் 10: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி வகுப்பறையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்ததில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தலையில் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மதிய உணவு இடைவேளையின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. 15 வயதான ஜாய் மெர்சி வகுப்பறையில் தனது புத்தகங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது, மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென பெயர்ந்து அவரது தலையில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். New Indian Express தகவலின்படி, மாணவிக்கு 5 தையல்கள் போடப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்தனர். சோமங்கலம் போலீசார் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

முதற்கட்ட ஆய்வில் கட்டிடத்தில் வெளிப்படையான விரிசல்கள் முன்பே தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்ததாகவும், பின்னர் உதவி பொறியாளர் பள்ளிக் கட்டிடத்தை ஆய்வு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கட்டிடத்தின் நிலை மற்றும் ceiling plaster எதனால் பெயர்ந்து விழுந்தது என்பதைக் கண்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பள்ளிக் கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மத்தியில் இந்த சம்பவம் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் பயன்படுத்தும் வகுப்பறைகளின் கட்டிட உறுதித்தன்மையை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.