பி.டெக். மாணவர்களுக்கு ஆறு மாதத் தொழிற்பயிற்சி – சென்னை ஐஐடியில் ஜனவரி முதல் அறிமுகம்
சென்னை ஐஐடி, பி.டெக். மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஆறு மாதத் தொழிற்பயிற்சியை அறிமுகப்படுத்துகிறது. 2024-ஆம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு இந்தத் திட்டம் முதலில் நடைமுறைக்கு வருகிறது. அவர்கள் 2027 ஜனவரி முதல், ஆறாவது செமஸ்டரில் தொழிற்பயிற்சியை மேற்கொள்வார்கள்.
இதுவரை மூன்றாம் ஆண்டு முடிந்த பிறகு, கோடை விடுமுறையில் இரண்டு மாதத் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில், மாணவர்கள் தங்கள் படிப்பின் ஒரு செமஸ்டரிலேயே நீண்டகாலத் தொழிற்பயிற்சியை மேற்கொள்ள முடியும். சென்னை ஐஐடியின் Career Pathway Centre இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
ஆறு மாதப் பயிற்சியால், ஒரு நிறுவனத்தில் அன்றாடப் பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதையும், பொறியியல் சிக்கல்களுக்கு வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த குழுக்கள் எவ்வாறு இணைந்து தீர்வு காண்கின்றன என்பதையும் மாணவர்கள் நேரடியாக அறிந்துகொள்ள முடியும். வகுப்பறையில் கற்ற பொறியியல் கருத்துகளை நடைமுறைப் பணிகளில் பயன்படுத்திப் பார்க்கவும் இந்தக் காலம் வாய்ப்பளிக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.
மாணவர்களின் திறனை மதிப்பிட நிறுவனங்களுக்கும் கூடுதல் காலம் கிடைக்கும். இதன் மூலம், சில மாணவர்களுக்குப் படிப்பை முடிப்பதற்கு முன்பே வேலைவாய்ப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம் என்று சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பயிற்சி வாய்ப்புகளை சென்னை ஐஐடி ஆராய்ந்து வருகிறது. தொலைநிலையிலும் தொழிற்பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், அமேசான் இந்தியா நிறுவனம் அக்டோபர் மாதம் முதல் வாய்ப்புகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்துக்கு மாணவர்கள் மற்றும் நிறுவனங்களிடையே வரவேற்பு இருப்பதாகவும், மாணவர்கள் சிலர் ஏற்கெனவே பதிவு செய்துள்ளதாகவும் பயிற்சியை ஒருங்கிணைக்கும் மையம் தெரிவித்துள்ளது.
— அரசுபார்வை செய்திகள்