ஒடிசாவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்த இருவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோழவரம் டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் பேபரி (25) மற்றும் பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தன்குமார் (30) என்பது தெரியவந்தது.

அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் 11 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அந்த கஞ்சாவை ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து திருப்பூர் மாவட்டத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 11 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா கடத்தல் வலையமைப்பில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.