
தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த பிரியா என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆயுதப்படை காவலர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் தகவலின்படி, பிரியாவின் சகோதரிக்கும் காவலர் முத்துக்குமாருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பிரியா தனது சகோதரியை கண்டித்ததாகவும், இதுதொடர்பாக முத்துக்குமாருக்கும் பிரியாவுக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிரியா தனது ஜெராக்ஸ் கடையை மூடிக் கொண்டிருந்தபோது முத்துக்குமார் அங்கு வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீஸ் கூறுகிறது. வாக்குவாதம் தீவிரமான நிலையில் அவர் பிரியாவை தாக்கியதாகவும், அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்தில் தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த வழக்கில் முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்துக்கு முன் நடந்த நிகழ்வுகள் குறித்து போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருகிறது.