திருச்சி அரியமங்கலம் வி.ஓ.சி. தெருவைச் சேர்ந்த பிலோமின் ராஜ் (67) என்பவரின் மனைவி, பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த மாதம் 31-ஆம் தேதி அவருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது.

அழைத்த நபர் தன்னை மதன்குமார் என்றும், CBI-யில் இருந்து பேசுவதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர், அவரது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கணக்கில் பெரிய தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனால் கைது செய்யப்படாமல் இருக்க பணம் செலுத்த வேண்டும் என அந்த நபர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை நம்பிய ஓய்வு பெற்ற ஆசிரியை, அவர் கூறிய வங்கிக் கணக்கிற்கு ரூ.17 லட்சம் அனுப்பியுள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்துள்ளார்.

அந்த நபரை மீண்டும் தொடர்புகொள்ள முயன்றபோது அவரது செல்போன் எண் switch off செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பிலோமின் ராஜ் ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம், Digital Arrest எனப்படும் போலியான சட்ட மிரட்டல் மோசடிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.