மணிலா:
பிலிப்பைன்சின் வடக்கு பம்பன் நகரத்தின் முன்னாள் மேயர் ஆலிஸ் குவோ (வயது 35), சீனாவைச் சேர்ந்தவர். சட்டவிரோதமாக பிலிப்பைன்ஸ் குடியுரிமையை பெற்று அந்நாட்டில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், சீனாவின் சொந்தமான ஒரு சூதாட்ட நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் மூலம் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆலிஸ் குவோ பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், சீனாவுக்கு உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை தற்போது நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன் படி, முன்னாள் மேயர் ஆலிஸ் குவோ மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.