புதுடில்லி: டில்லியில் புதிதாக உருவாகி வரும் பிரதமர் இல்லத்திற்கு ‘சேவா தீர்த்’ (புனிதமான சேவை தலம்) என மத்திய அரசு பெயரிட்டுள்ளது.

சென்ட்ரல் விஸ்டா பகுதிக்கான மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, பார்லிமென்ட் கட்டிடம், துணை ஜனாதிபதி இல்லம், மத்திய அரசு அலுவலகங்கள், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான கர்தவ்ய பாதை உள்ளிட்டவை முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. மொத்த திட்டத்திற்காக சுமார் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய பார்லிமென்ட் கட்டிடம் ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், துணை ஜனாதிபதி இல்லமும் கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனுடன், பிரதமருக்கான புதிய இல்லம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், அந்த புதிய இல்லத்திற்கு ‘சேவா தீர்த்’ என பெயரிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி:
புதிய பிரதமர் இல்லம், சேவை மனப்பான்மை மற்றும் தேசிய முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் பணியிடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிர்வாகத்துறையில் நடைபெறும் மாற்றங்கள், அதிகாரத்திலிருந்து பொறுப்பிற்கு, அந்தஸ்திலிருந்து சேவைக்கு மாறி வரும் நிலையில், இந்த பெயரிடல் ஒரு சின்னமாக அமைகிறது என்று அவர்கள் கூறினர்.

மேலும், பிரதமர் மோடியின் தலைமையில் நிர்வாகம், கடமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நலன் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு என்பது மக்கள் சேவைக்காய் உருவாக்கப்பட்டதே என்ற எண்ணத்தைக் குறிப்பது போன்ற பெயர்கள் தற்போது வழங்கப்படுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

2016ஆம் ஆண்டு, தற்போதைய பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு ‘லோக் கல்யாண் மார்க்’ என பெயர் சூட்டப்பட்டது. இது மக்கள் நலனை முன்னிறுத்தும் நோக்கத்தில் மாற்றப்பட்ட பெயராகும்.

அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது: ஒவ்வொரு பெயர் மாற்றமும் இந்திய ஜனநாயகத்தில் உருவாகும் புதிய சிந்தனையையும் பண்பாட்டு மாற்றத்தையும் வெளிப்படுத்துகிறது. அதிகாரத்தை விட கடமை, அந்தஸ்தை விட சேவையை முன்னிற்கும் மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றனர்.

சமீபத்தில், ‘ராஜ்பவன்’ என அழைக்கப்பட்ட கவர்னர் மாளிகை ‘லோக் பவன்’ என மாற்றப்பட்டது. அதற்கு முன்பு, ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ‘ராஜ்பாத்’, ‘கர்தவ்ய பாத்’ (கடமைப் பாதை) என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.