புதுடெல்லி,

தலைநகர் டெல்லியின் ஜானக்புரி பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு காவல்துறைக்கு சொந்தமான பஸ் மற்றும் ஒரு கார் மோதியதில் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சின் பின்னால் வேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில், இரு வாகனங்களும் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின.

அதிர்ஷ்டவசமாக, பஸ் மற்றும் காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியில் இறங்கி விட்டதால், எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் இரு வாகனங்களும் முழுவதுமாக தீக்கிரையாகின.

தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். விபத்திற்குப் பிறகு வாகனங்கள் எவ்வாறு தீப்பற்றி எரிந்தன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.