ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் தோர்பா பகுதியில் நடைபெற்ற ஜெகநாதர் ரத யாத்திரையின்போது, தேர் மீது உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பி உரசியதால், மின்சாரம் தாக்கி இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் எப்படி நடந்தது? தோர்பா பகுதியில் இன்று ஜெகநாதர் ரத யாத்திரை கோலாகலமாகத் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜெகநாதர் எழுந்தருள, சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பக்தர்கள் ரதத்தை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகத் தேர் 11,000 வோல்ட் மின்சாரம் கொண்ட உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பி மீது உரசியது.

மின்சாரத் தாக்குதல் தேரின் மீது மின்சாரம் பாய்ந்த வேகத்தில், தேரைப் பிடித்து இழுத்து வந்துகொண்டிருந்த மாணவர்கள் மின்சாரம் தாக்கித் தூக்கி வீசப்பட்டனர். இந்த அதிர்ச்சிகரமான விபத்தில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் ரத யாத்திரை உடனடியாக நிறுத்தப்பட்டது.

பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்ட ரத யாத்திரையில், பாதுகாப்பு குறைபாட்டினால் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.