ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில், வீட்டிற்குள் நுழைய முயன்ற விஷ நாகப்பாம்புடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி, தன் உரிமையாளரின் குடும்பத்தைக் காப்பாற்றிய வளர்ப்பு நாயின் வீரச் செயல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சம்பவத்தின் பின்னணி காக்கிநாடா மாவட்டம் யு.கோத்தபள்ளி மண்டலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். நேற்று நள்ளிரவு, ஸ்ரீநிவாஸின் வீட்டிற்குள் சுமார் 5 அடி நீளமுள்ள கொடிய நாகப்பாம்பு ஒன்று நுழைய முயன்றது. இதைக் கண்ட ஸ்ரீநிவாஸின் ‘பாக்ஸர்’ இன வளர்ப்பு நாய், உடனடியாகப் பாம்பை வழிமறித்துச் சண்டையிடத் தொடங்கியது.

உயிரைப் பணயம் வைத்த போராட்டம் பாம்பு வீட்டிற்குள் நுழையாமல் தடுக்க நாய் மிகுந்த ஆக்ரோஷத்துடன் போராடியது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தப் போராட்டத்தில், அந்தப் பாம்பை நாய் கடித்துக் கொன்றது. இருப்பினும், சண்டையின் போது நாய் மீது பலமுறை நாகப்பாம்பு கடித்ததால், விஷம் அதன் உடல் முழுவதும் வேகமாகப் பரவியது. பாம்பு இறந்த சில நிமிடங்களிலேயே நாய் மயங்கி விழுந்தது.

மீண்டு வந்த விசுவாசம் மயங்கிய நிலையில் இருந்த நாயை உடனடியாக ஸ்ரீநிவாஸ் காக்கிநாடாவில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு தீவிர நச்சுமுறிவு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாய் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி தற்போது நலமுடன் தேறி வருகிறது. தன் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக உயிரைப் பணையம் வைத்த நாயின் விசுவாசத்தைப் பாராட்டி, அப்பகுதி மக்கள் அதற்குப் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.