உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 23 வயது இளைஞர், அரசு வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதனைப் பட்டதாரி கான்பூர், கோவிந்த நகரைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார் (23). இவர் கடந்த 2024-ஆம் ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படிப்பில் தங்கப்பதக்கம் வென்றதோடு, மாநில அளவில் 3-வது இடத்தையும் பிடித்திருந்தார். கல்வியில் சிறந்து விளங்கியதற்காக உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேலிடம் இருந்து அவர் தங்கப்பதக்கத்தைப் பெற்றிருந்தார்.
என்ன நடந்தது? குடும்பத்தினர் பீகாரில் உள்ள சொந்த ஊருக்குத் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஆனந்த் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அறையில் இருந்த தற்கொலைக்குறிப்பைக் கைப்பற்றினர். அதில், “தந்தைக்காக 50-க்கும் மேற்பட்ட முறை அரசு வேலைவாய்ப்புத் தேர்வுகளில் பங்கேற்றும் வெற்றி பெற முடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்” என்று உருக்கமாக எழுதியிருந்தார்.
மன உளைச்சலில் வாலிபர் இது குறித்து ஆனந்தின் தந்தை ராஜ்குமார் கூறுகையில், “ரயில்வே, வங்கி மற்றும் கல்வித்துறை எனத் தொடர்ந்து பல அரசு வேலைத் தேர்வுகளில் எனது மகன் பங்கேற்றான். ஆனால், எந்த ஒன்றிலும் வெற்றி பெற முடியாமல் போனதால், பல மாதங்களாக அவன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தான்” என்று கதறி அழுதார்.
திறமை மிக்க இளைஞர் ஒருவர், தொடர் தோல்விகளால் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்ட இந்தச் சம்பவம், தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.