உத்தர பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டம், கோக்ராஜ் சுங்கச்சாவடியில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரத் தீ விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5 ஆக உயர்ந்துள்ளது.

விபத்து நடந்தது எப்படி? கடந்த ஜூன் 26-ம் தேதி, எல்.பி.ஜி. கியாஸ் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று, சுங்கச்சாவடியின் தடுப்புச் சுவரின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. மோதிய வேகத்தில் டேங்கரில் ஏற்பட்ட கியாஸ் கசிவு காரணமாக, அப்பகுதி முழுவதும் அடர்த்தியான புகை பரவி, அடுத்த சில நொடிகளில் பயங்கர தீப்பிழம்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தீ விபத்தின் பாதிப்புகள் இந்தக் கொடூர தீ விபத்தில், சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த 16 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 கார்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. சம்பவத்தன்றே லாரி ஓட்டுநர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் கடந்த ஜூலை 1-ம் தேதி உயிரிழந்தார். இந்த வரிசையில், தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ரேபரேலியைச் சேர்ந்த ஹிராமணி சிங் (29) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ண பால் மவுர்யா (23) ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதனால் விபத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

விபத்து நடைபெற்றபோது டேங்கர் சுங்கச்சாவடியைக் கடக்கும் முன்பே எரிவாயு கசிந்ததும், பின்னர் பெரும் தீ விபத்து ஏற்பட்டதும் சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.