பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பது வாகனங்களின் என்ஜினைச் சேதப்படுத்தும் என்ற பரவலான அச்சம் மற்றும் வதந்திகளுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

அறிவியல் பூர்வமான பாதுகாப்பு எத்தனால் கலப்பு என்பது அறிவியல் ஆய்வுகள் மற்றும் சர்வதேச அனுபவங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அளவில் எத்தனால் எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாகனங்களின் செயல்திறனைப் பாதிக்குமா எனச் சோதிக்க, கார்கள் 40,000 கி.மீ. மற்றும் இருசக்கர வாகனங்கள் 20,000 கி.மீ. வரை இயக்கி பரிசோதிக்கப்பட்டன. இந்தச் சோதனைகளில் என்ஜினுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பழைய வாகனங்களில் மட்டும் சில ரப்பர் பாகங்களைச் சற்று முன்னதாகவே மாற்ற வேண்டியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வதந்திகளுக்கு மறுப்பு

  • காப்பீடு மற்றும் வாரண்டி: எத்தனால் கலப்புள்ள எரிபொருளைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் காப்பீடு அல்லது வாரண்டி கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் என்பது தவறான தகவல். இதை வாகன உற்பத்தி நிறுவனங்களும், காப்பீட்டு நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.

  • தண்ணீர் பயன்பாடு: ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 10,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறு. வெறும் 3 முதல் 5 லிட்டர் பதப்படுத்தப்பட்ட நீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, அதுவும் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

  • மைலேஜ்: வாகனத்தின் மைலேஜில் மிகச்சிறிய அளவிலான மாற்றமே இருக்கும் தவிர, பெரிய பாதிப்பு இருக்காது.

  • மற்றவை: எத்தனாலில் சர்க்கரை இல்லை, எனவே தேனீக்கள் மொய்க்காது. அத்துடன், இது எரிபொருள் டேங்கில் நீர் ஊடுருவுவதைத் தடுக்கும் தன்மையுடையது.

பொருளாதாரப் பயன் 20 சதவீத எத்தனால் கலப்பு முறையை அமல்படுத்தியதன் மூலம் இதுவரை சுமார் ரூ. 1.90 லட்சம் கோடி மதிப்பிலான அன்னியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. சோளம் போன்ற பயிர்களின் பயன்பாடு எத்தனால் உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் மேல் இருப்பதால், இது வேளாண் துறையிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எத்தனால் உற்பத்தி ஆலைகள் சுற்றுச்சூழலுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.