உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் உள்ள ‘மேர்ஸ்க்-கான்கார்’ மையத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கப்பல் கண்டெய்னரை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் நேற்று அறிமுகப்படுத்தினார். இது இந்தியாவின் உற்பத்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் வெற்றி பிரதமரின் ‘தன்னிறைவு இந்தியா’ (Atmanirbhar Bharat) மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டங்களை முன்னெடுப்பதில் மத்திய அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பையே இந்த நிகழ்வு வெளிப்படுத்துவதாக மந்திரி சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 2025-ல் பிரதமர் மோடி மற்றும் ‘ஏ.பி. மோல்லர் மேர்ஸ்க்’ நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் மேர்ஸ்க் உக்லா இடையேயான சந்திப்பின்போது, இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த கண்டெய்னர் உற்பத்தியை மேம்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் விளைவாக, வெறும் 16 மாதங்களுக்குள் இந்தத் தொலைநோக்குத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வணிக ஒத்துழைப்பின் தொடக்கம் இந்தியாவின் உற்பத்தித் திறனின் மீது சர்வதேச நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், இந்நிகழ்ச்சியின் போது ‘மேர்ஸ்க்’ நிறுவனம், ‘டிசிஎம் ஶ்ரீராம் குழுமத்திடம்’ இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள மேலும் 1,000 கப்பல் கண்டெய்னர்களுக்கான கொள்முதல் ஆணையை (Purchase Order) வழங்கியது. இது நீண்டகால வணிக ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல்சார் வல்லரசு இந்தியா நிகழ்ச்சியில் பேசிய மந்திரி சர்பானந்தா சோனோவால், “பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், இந்தியா இன்று உலகின் நம்பகமான உற்பத்தி மையமாகவும், கடல்சார் வல்லரசு நாடாகவும் அதிவேகமாக உருவெடுத்து வருகிறது. இந்த முயற்சி உலகளாவிய கடல்சார் மதிப்புச் சங்கிலியில் (Global Maritime Value Chain) இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியா உலக வர்த்தக வரைபடத்தில் தனது இடத்தைத் தக்கவைத்து வருவதையும் இந்தச் சாதனை உறுதி செய்துள்ளது.