நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தினர். இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டமும் தடியடியும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், பாதுகாப்பு கருதி டெல்லி காவல்துறை புதுடெல்லி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை (144 தடை) அமல்படுத்தியது. போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதிலும், கட்சியின் தொண்டர்கள் நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி முன்னேறினர். அவர்களைத் தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் படையினர், தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

ஜனாதிபதி மாளிகை பாதுகாப்பு போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி முன்னேறக் கூடும் என்ற அச்சத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனாதிபதி மாளிகையின் நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன. மேலும், டெல்லி மெட்ரோ நிர்வாகம் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐந்து மெட்ரோ நிலையங்களை மூடியது. முன்ன அனுமதி பெற்ற ஜந்தர் மந்தரைத் தவிர, மற்ற இடங்களில் ஐவருக்கு மேல் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.