புதுடெல்லியில், ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Karappan Poochi Janata Party) என்ற அமைப்பின் நிறுவனர் மீது பெண் ஒருவர் மர்ம திரவத்தை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த அபிஜித் தீப்கே? மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜி நகரைச் சேர்ந்த 30 வயது இளைஞரான அபிஜித் தீப்கே, இணையதளத்தில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் ஒரு தளத்தைத் தொடங்கி, அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்த நையாண்டி கருத்துகளைப் பதிவிட்டு வந்தார். இவரது தனித்துவமான விமர்சனங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததால், குறுகிய காலத்திலேயே பல லட்சம் பேர் அந்த இணையதளத்தில் இணைந்தனர். இதன்காரணமாக, அவரது சமூக வலைதளப் பக்கங்களின் செயல்பாடுகள் தீவிரமடைந்த நிலையில், அவை முடக்கப்பட்டன.

தீவிரமடைந்த எதிர்ப்பு சமீபகாலமாக சி.பி.எஸ்.இ. (CBSE) தேர்வு டிஜிட்டல் மதிப்பீடு முறையிலும், நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்திலும் நிலவும் குறைபாடுகளை இந்த அமைப்பு கடுமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக, இந்த விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று அபிஜித் தீப்கே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தாக்குதல் சம்பவம் இந்தச் சூழலில், டெல்லியில் இருந்த அபிஜித் தீப்கே மீது பெண் ஒருவர் திடீரென மர்ம திரவத்தை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்தத் தாக்குதலுக்கான பின்னணி என்ன? அந்தப் பெண் யார்? இதன் பின்னால் ஏதேனும் அரசியல் சதி உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அரசின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி வந்தவர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.