இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டைக் குறைத்து, நீண்ட காலம் உழைக்கக்கூடிய பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்டப் பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடங்கியுள்ளது.
உலகளாவிய டெண்டர் காகித ரூபாய் நோட்டுகள் அதிக புழக்கத்தினால் விரைவில் சேதமடைவதும், கிழிந்து போவதும் பொதுவான சிக்கலாக உள்ளது. இதற்கு மாற்றாகப் பிரத்யேக பாலிமர் தாள்களைப் பயன்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதற்காக, பாலிமர் தாள்களை சப்ளை செய்ய முன்வரும் சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து உலகளாவிய டெண்டர்களை ரிசர்வ் வங்கியின் நோட்டு அச்சிடும் பிரிவு கோரியுள்ளது. இந்தத் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் ஆகஸ்ட் 18-ம் தேதியை இறுதி நாளாக நிர்ணயித்துள்ளது.
முதற்கட்ட சோதனை பொதுமக்களிடம் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை முதற்கட்டமாகப் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றிச் சோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், வரும் காலங்களில் பிற ரூபாய் நோட்டுகளும் பிளாஸ்டிக் வடிவில் அச்சிடப்பட வாய்ப்புள்ளது.
பழைய நோட்டுகளின் நிலை? புதிய பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகமானாலும், மக்களிடம் தற்போது புழக்கத்தில் இருக்கும் காகித ரூபாய் நோட்டுகள் உடனடியாகச் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் என இரண்டுமே சந்தையில் சமமான முறையில் புழக்கத்தில் இருக்கும் என்பதால், பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நீண்ட காலப் பயன்பாடு மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட பாலிமர் நோட்டுகளின் வருகை, இந்திய பணப் பரிவர்த்தனை முறையில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.