அபுதாபி, குவைத், சிங்கப்பூர் மற்றும் கேன்பெர்ரா ஆகிய 4 இந்திய தூதரகங்களில் பாஸ்போர்ட், விசா மற்றும் தூதரக சேவைகளை வெளிமுகமை (Outsourcing) மூலம் ஒப்பந்தம் செய்வதற்காக மத்திய அரசு வெளியிட்டிருந்த டெண்டர்களை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு மத்திய அரசின் வாதங்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்ததோடு, மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

முக்கிய அம்சங்கள்:

  • வெளிப்படைத்தன்மை: டெண்டர் கோரப்பட்ட பிறகு அதன் நிபந்தனைகளை மாற்ற முடியாது என்பதை நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

  • காலக்கெடு: புதிய டெண்டர் செயல்முறைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைவாகவும், வரும் 3 மாதங்களுக்குள் முடிக்கவும் வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  • இடைக்கால ஏற்பாடு: புதிய டெண்டர் நடைமுறை முடிவடையும் வரை, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் சேவைகளில் எவ்விதத் தடையும் ஏற்படாத வகையில் தற்காலிகத் தேவையான இடைக்கால ஏற்பாடுகளைச் செய்ய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூதரகச் சேவைகளில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.