சாங்லி: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, மராட்டிய மாநிலம் சாங்லியைச் சேர்ந்தவர். சமீபத்தில் மகளிர் உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு முக்கிய பங்களிப்பு செய்த அவர், மகளிர் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான வீராங்கனைகளில் ஒருவராக விளங்குகிறார்.

29 வயதான மந்தனா, பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் நீண்ட காலமாக காதலில் இருந்தார். சில வாரங்களுக்கு முன்பு இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். கடந்த 23ஆம் தேதி சாங்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. திருமணத்துக்கு முன் மெஹந்தி விழாவும் நடைபெற்றது. ஆனால், திருமணத்திற்கு முன்பே மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் மனம் உடைந்த மந்தனா, தந்தை முழுமையாக குணமடைந்த பிறகே திருமணம் நடைபெறும் என அறிவித்தார். இதனால் திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையில், பலாஷ் முச்சலும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பெற்று நலம்பெற்றார். ஆனால், பலாஷ் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் ‘ஸ்கிரீன்ஷாட்கள்’ இணையத்தில் பரவியதால், திருமணம் தள்ளிவைக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் ‘துரோகம்’ என்கிற சர்ச்சை கிளம்பியது.

இந்த விவகாரம் பேசுபொருளாகிய நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சலுடன் எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நீக்கிவிட்டார். திருமண கொண்டாட்ட புகைப்படங்களையும் அழித்துள்ளார். இது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சில வாரங்களுக்கு பின், ஸ்மிருதி மந்தனா மீண்டும் சமூக ஊடகங்களில் தோன்றியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் ஒரு தனியார் நிறுவன விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவரது கைகளில் நிச்சயதார்த்த மோதிரம் இல்லாதது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. மேலும், அந்த விளம்பரம் திருமணத்திற்கு முன்பே படமாக்கப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை.