விசாகப்பட்டினம்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்கா அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வென்றது. ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1–1 என்ற நிலையில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்தியாவின் பேட்டிங் வலுவாக உள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் ரன் மழை பொழிந்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் 358 ரன்கள் எடுத்தும் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் தவறியதால் இந்தியா வெற்றியை இழந்தது. இரவில் பனியின் தாக்கம் காரணமாக பவுலர்கள் பந்தை கட்டுப்படுத்த சிரமப்படுகின்றனர். இதனால் பேட்ஸ்மேன்களுக்கு ரன்கள் எளிதாக கிடைக்கிறது. எனவே ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் கடந்த 20 ஒருநாள் ஆட்டங்களில் இந்தியா தொடர்ந்து டாஸில் தோல்வியடைந்துள்ளது. இன்று அதிர்ஷ்டம் மாறுமா என்பது கவனிக்கத்தக்கது.
மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா இருவருக்கும் இது ஆண்டின் கடைசி சர்வதேச ஆட்டமாகும். அவர்கள் வெற்றியுடன் நிறைவு செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் இரண்டு ஆட்டங்களில் 135 மற்றும் 102 ரன்கள் எடுத்த கோலி, ‘ஹாட்ரிக்’ சதம் அடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். விசாகப்பட்டினம் கோலிக்கு அதிர்ஷ்டமான மைதானம்; இங்கு ஏற்கனவே மூன்று சதங்கள் அடித்துள்ளார்.
பந்து வீச்சில் இந்தியா இன்னும் வலிமையடையவில்லை. கடந்த ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா 8.2 ஓவர்களில் 85 ரன்கள் விட்டார். மாற்று வேகப்பந்து வீச்சாளர் இல்லாததால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். 1986–87க்குப் பிறகு இந்தியா சொந்த மண்ணில் ஒரே பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்ததில்லை. அந்த பெருமையை தக்கவைக்க இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
தென்ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், மேத்யூ பிரீட்ஸ்கே, பிரேவிஸ், யான்சென் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். முந்தைய வெற்றியால் அவர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காண்கிறார்கள். தசைப்பிடிப்பால் அவதிப்படும் நன்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி ஆகியோருக்கு இடமில்லை என்று தெரிகிறது.
தென்ஆப்பிரிக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கே கூறுகையில்: “இந்த ஆட்டத்தில் இந்தியா வலுவாக மீண்டு வரும். இது தொடரை தீர்மானிக்கும் ஆட்டம் என்பதால் சிறந்த போட்டியாக இருக்கும். எங்களது அணியில் சில பவுலர்கள் பேட்டிங்கும் செய்வதால் அணியின் கலவை சரியாக உள்ளது. பிரேவிஸ், யான்சென், கார்பின் பாஷ் போன்றோர் எந்த தருணத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள். நாளைய தினம் (இன்று) சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்றார்.
விசாகப்பட்டினத்தில் இந்தியா இதுவரை 10 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 2 தோல்வி, 1 சமனில் முடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா இங்கு இதற்கு முன்பு ஒருநாள் போட்டி ஆடியதில்லை.
போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
உத்தேச அணிகள்:
இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், லோகேஷ் ராகுல் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா
தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம், குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, ரையான் ரிக்கெல்டன், டிவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், கேஷவ் மகராஜ், லுங்கி இங்கிடி, பார்த்மேன்