வாஷிங்டன்: உக்ரைன்–ரஷியா இடையே போர் இன்று 1,383வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. அதேசமயம், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். போர் நிறுத்தத் திட்டம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை அவர் முன்மொழிந்துள்ளார். ஆனால், அந்த நிபந்தனைகளில் சிலவற்றை உக்ரைன் ஏற்க மறுத்ததால், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த டொனால்டு டிரம்பிடம் உக்ரைன்–ரஷியா போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமைதி திட்டத்தை ரஷியா ஏற்றுக்கொண்டுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இந்த திட்டத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புரிந்துகொள்ளவில்லை; அது எனக்கு ஏமாற்றமாக உள்ளது,” என்றார்.