புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இஷா சிங்கிற்கு பாராட்டு

புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கட்சியின் பொதுக்கூட்டம் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார். கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து 72 நாட்களுக்கு பிறகு பொதுவெளியில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால், கடுமையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

கூட்டம் நடைபெறும் இடத்தில் நுழைவு வாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சிலர் போலீசாரின் தடுப்பை மீறி மைதானத்திற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு நிலவியது. நிலைமை கட்டுக்குள் வர போலீசார் லேசான தடியடி நடத்தினர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங்கிடம், பாஸ் இல்லாத தொண்டர்களை மைதானத்திற்குள் அனுமதிக்குமாறு த.வெ.க. நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் ஆவேசம் அடைந்த இஷா சிங், “காவல்துறை என்ன செய்ய வேண்டும் என நீங்கள் உத்தரவிட வேண்டாம். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்தால் நாங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். கரூரில் 41 பேர் பலியான சம்பவம் நினைவில் இல்லையா? அதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகளை சரியாக பின்பற்றுங்கள்” எனக் கடுமையாக எச்சரித்தார். பின்னர் காலை 10.10 மணிக்குப் பிறகு பாஸ் இல்லாத தொண்டர்களும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் போது, த.வெ.க. நிர்வாகிகளிடம் இஷா சிங் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. அவரது திடமான நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்தன. காவல்துறை அதிகாரியாக அவர் எடுத்துக்கொண்ட உறுதியான நிலைப்பாடு, பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய அவரது கடமை உணர்வு ஆகியவை சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், த.வெ.க. பொதுக்கூட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததற்காக, புதுச்சேரி உள்துறை மந்திரி நமச்சிவாயம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங்கிற்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அவரது பணியாற்றும் திறமை மற்றும் பொறுப்புணர்வை அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.