மெஸ்சியின் இந்திய சுற்றுப்பயணம் டெல்லியில் நிறைவு – ரசிகர்கள் ஆரவாரத்தில் அதிர்ந்த அருண் ஜெட்லி மைதானம்

புதுடெல்லி: அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், 8 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற லயோனல் மெஸ்சி, 3 நாள் சிறப்பு சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மெஸ்சியின் இந்த பயணம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்நாளில் கொல்கத்தா சென்ற மெஸ்சி, அங்கு தனது முழுஉருவ சிலையை திறந்து வைத்தார். பின்னர் சால்ட்லேக் ஸ்டேடியத்தில் ரசிகர்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மைதானத்தில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரித்ததால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மெஸ்சி அங்கிருந்து விரைவாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரை நேரில் காண முடியாத ஏமாற்றத்தில் சில ரசிகர்கள் மைதானத்தை சூறையாடியதால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்.

அடுத்ததாக ஐதராபாத் சென்ற மெஸ்சி, அங்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் கால்பந்து விளையாடி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இரண்டாவது நாள் பயணமாக அவர் மும்பை சென்றார். வான்கடே ஸ்டேடியத்தில் மெஸ்சியை வரவேற்க பிரமாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்டேடியம் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. பலர் அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணிகளின் சீருடைகளை அணிந்து வந்திருந்தனர். மெஸ்சி மைதானத்திற்குள் நுழைந்தவுடன் “மெஸ்சி… மெஸ்சி…” என்ற கோஷம் முழங்கியது. பெனால்டி ஷாட் அடித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர், பின்னர் ரசிகர்களை நோக்கி கால்பந்துகளை உதைத்து உற்சாகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், இந்திய கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். மெஸ்சிக்கு தனது கையெழுத்திட்ட பனியனை நினைவுப் பரிசாக வழங்கிய தெண்டுல்கர், “கால்பந்தில் எல்லா சாதனைகளையும் மெஸ்சி நிகழ்த்தியுள்ளார். அவரது அர்ப்பணிப்பு, மனஉறுதி, ஈடுபாடு மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்” என்று பாராட்டினார். மும்பையில் மெஸ்சி ஒரு மணி நேரம் ரசிகர்களுடன் நேரம் செலவிட்டார்.

மூன்றாவது நாள் பயணமாக இன்று மெஸ்சி டெல்லி சென்றடைந்தார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் அவரை வரவேற்க சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மைதானம் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. மெஸ்சி வந்தவுடன் “மெஸ்சி… மெஸ்சி…” என்ற கோஷத்தால் மைதானம் அதிர்ந்தது. ரசிகர்களை நோக்கி கால்பந்துகளை வீசி அவர் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

மெஸ்சியின் 3 நாள் இந்திய பயணம் டெல்லியில் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.