பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: 8 மாத விசாரணைக்கு பிறகு ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல்
ஜம்மு: காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பு ‘தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்’ (TRF) பொறுப்பேற்றது.
தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில், பஹல்காம் தாக்குதலில் நேரடியாக தொடர்புடைய மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் — ஜிப்ரான், சுலைமான், அப்கான் — சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்களை ஆய்வு செய்தபோது, காஷ்மீரை சேர்ந்த சில நபர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ஆதரவு வழங்கியிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து, குல்காம் மாவட்டத்தை சேர்ந்த கட்டாரியா என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, உள்ளூர்வாசிகளான பஷீர் மற்றும் பர்வேஸ் ஜோதர் ஆகியோரும் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். விசாரணை பல்வேறு திசைகளில் விரிவுபடுத்தப்பட்டு, சம்பவத்தின் முழு பின்னணியும், சதித்திட்டமும், உள்ளூர் ஆதரவாளர்களின் பங்களிப்பும் தெளிவுபடுத்தப்பட்டது.
எட்டு மாதங்களாக நடைபெற்ற விரிவான விசாரணைக்கு பிறகு, தேசிய புலனாய்வு முகமை (NIA) இன்று ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த விரிவான குற்றப்பத்திரிகையில், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவிய உள்ளூர் நபர்கள், சதித்திட்டம், ஆயுதங்கள் வழங்கப்பட்ட விதம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
குற்றப்பத்திரிகையில், ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் கொல்லப்பட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பெயர்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், தாக்குதலுக்கு ஆதரவளித்ததாக கூறப்படும் ஆறு உள்ளூர்வாசிகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள், சாட்சியங்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆகியவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றப்பத்திரிகை தாக்கல், பஹல்காம் தாக்குதல் வழக்கில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. அடுத்த கட்ட விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.