‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ – ஜேம்ஸ் கேமரூனின் மாபெரும் தொடரின் மூன்றாம் பாகம் 19ம் தேதி வெளியாகிறது

உலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ தொடரின் மூன்றாம் பாகம் ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ இந்த மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2009ஆம் ஆண்டு வெளியான முதல் ‘அவதார்’ படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. பண்டோரா எனும் கற்பனை உலகை கண்கொள்ளாக் காட்சிகளுடன் உருவாக்கிய கேமரூனின் தொழில்நுட்ப மேம்பாடு, 3D அனுபவம் மற்றும் கதை சொல்லும் முறை ரசிகர்களை மெய்மறக்க வைத்தது. அந்த படம் வசூலில் சாதனை படைத்து, மூன்று ஆஸ்கார் விருதுகளையும் வென்றது.

அதனைத் தொடர்ந்து, 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2022ஆம் ஆண்டு ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ வெளியானது. இந்த படம் ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியானது. இரண்டாம் பாகமும் உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை படைத்து, சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது.

இப்போது, தொடரின் மூன்றாம் பாகமான ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ, திலீப் ராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பண்டோரா உலகின் புதிய பரிமாணங்களை இந்த படத்தில் காணலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் முன்பே கூறியதாவது, மூன்றாம் பாகத்தில் பண்டோரா உலகில் இரண்டு புதிய கலாச்சாரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, ‘நெருப்பு’ இந்த படத்தின் மையக் குறியீடாக இருக்கும் என்றும், அந்தக் கருத்தைச் சுற்றி ஒரு புதிய கலாச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பண்டோரா உலகின் இருண்ட, தீவிரமான, உணர்ச்சி மிக்க பரிமாணங்களை ரசிகர்கள் அனுபவிக்கப் போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படத்தின் காட்சியமைப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, VFX தரம் ஆகியவை முன்பை விட மேலும் உயர்ந்திருக்கும் என படக்குழு கூறுகிறது. உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியாகும் இந்த படம், 2025ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹாலிவுட் ரிலீஸ்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

 
 

ஜேம்ஸ் கேமரூன், ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் வெளியீட்டை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்க புரஜெக்டர் ஆபரேட்டர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது அறிக்கையில், படத்தின் தொழில்நுட்ப தரம் முழுமையாக பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதில், “புரொஜெக்ஷன் ஸ்பெசிபிகேஷன் கோப்பு மற்றும் பிரேமிங் விளக்கப்படம் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒளி அளவுகள், ஆடியோ அமைப்பு, சரியான பிரேமிங் போன்ற முக்கிய தொழில்நுட்ப விவரங்கள் உள்ளன. அவற்றை கவனமாகப் படித்து, திரையரங்கின் ஒளி மற்றும் ஒலி அமைப்புகள் சரியாக அளவீடு செய்யப்பட்டு பயன்படுத்தத் தயாராக உள்ளன என்பதை உறுதிப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் போது ஒலியின் தரத்தை 7.0 அளவில் வைத்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த படத்தின் முழுமையான ஒலி அனுபவம் அந்த அளவில்தான் கிடைக்கும். நான் தனிப்பட்ட முறையில் மிக்ஸிங் பணியில் ஈடுபட்டுள்ளதால், அதற்கு குறைவாக அமைக்க வேண்டாம்” என கேமரூன் வலியுறுத்தியுள்ளார்.

அவதார் தொடரின் அடுத்த பாகங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்காவது பாகம் 2029 டிசம்பரில், ஐந்தாவது பாகம் 2031 டிசம்பரில் வெளியாகும் என படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.