திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்காக தேவையான அரை பிளேடுகளை பெருமளவில் நன்கொடையாக வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட வெர்டிஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் ஸ்ரீதர் போடுபள்ளி, ரூ.1.20 கோடி மதிப்பிலான ‘சில்வர் மேக்ஸ்’ அரை பிளேடுகளை திருமலை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினார். இந்த நன்கொடை, கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தும் சூழலில், தேவஸ்தானத்தின் செலவினத்தை குறைக்கும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
நன்கொடையாளரான ஸ்ரீதர் போடுபள்ளி வழங்கிய பிளேடுகள், ஒரு வருடத்திற்கு தேவஸ்தானத்தில் பயன்படுத்தப்படும் அளவுக்கு போதுமானவை என அதிகாரிகள் தெரிவித்தனர். திருமலையில் உள்ள அறங்காவலர் குழு தலைவரின் முகாம் அலுவலகத்தில், தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் இந்த பிளேடுகள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய தலைவர் நாயுடு, “பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தும் போது மொட்டையடிக்க தேவையான பிளேடுகளுக்காக தேவஸ்தானம் ஆண்டுதோறும் ரூ.1.16 கோடி வரை செலவிடுகிறது. கல்யாணகட்டாவில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 40 ஆயிரம் அரை பிளேடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில், ஒரு வருடத்திற்கு தேவையான பிளேடுகளை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ள ஸ்ரீதர் போடுபள்ளி போன்ற பக்தர்கள் பாராட்டத்தக்கவர்கள்” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நன்கொடையாளர் ஸ்ரீதர் போடுபள்ளி, தங்கள் நிறுவனம் நுகர்வோரின் தேவைகளை கருத்தில் கொண்டு அரை பிளேடுகளை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நிறுவனம் என பெருமையுடன் கூறினார். “திருமலையில் பக்தர்களின் தலைமுடி சேகரிக்க மொட்டையடிக்கும் சவர தொழிலாளர்களுக்கு எங்கள் அரை பிளேடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தரம் மற்றும் நீடித்த பயன்பாடு காரணமாக, ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட 52 நாடுகளில் எங்கள் நிறுவனத்தின் பிளேடுகளுக்கு அதிகமான தேவை உள்ளது” என்றார்.
மேலும், உலகப் புகழ்பெற்ற ‘7 ஓ’ கிளாக்’ பிளேடுகளும் தங்கள் நிறுவனத்திலேயே தயாரிக்கப்படுகின்றன என அவர் குறிப்பிட்டார். இந்த நன்கொடை நிகழ்வில் கல்யாணகட்டா ஏ.இ.ஓ. ராமகாந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
திருமலை தேவஸ்தானத்தின் தினசரி செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றும் இந்த நன்கொடை, பக்தர்களின் சேவையை மேலும் சீர்படுத்தும் வகையில் உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.