வங்காளதேசத்தில் பரபரப்பு – நாடாளுமன்றம் முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்

டாக்கா: வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்த மாணவர் போராட்டங்களில் முக்கிய தலைவராக விளங்கியவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி (32). அவர், இங்குலாப் மாஞ்சா அமைப்பின் தலைவராகவும், தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தவராகவும் இருந்தார்.

கடந்த 12-ந்தேதி, மர்ம நபர்கள் அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவரது தலையில் குண்டு பாய்ந்து, உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த செய்தி வெளிவந்ததும், வங்காளதேசம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டங்கள் வன்முறையாக மாறி, 2 பத்திரிகை அலுவலகங்கள், முன்னாள் பிரதமர் முஜிபுர் ரகுமான் மற்றும் ஷேக் ஹசீனா வீடுகள், அவாமி லீக் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும், இந்திய தூதரகங்கள் மற்றும் தூதர் வீடு மீது கற்கள் வீசப்பட்டன. போராட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதேசமயம், ஒரு இந்து இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமும் நடந்தது.

வன்முறை அதிகரித்ததால், ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையில், ஷெரீப் உஸ்மான் ஹாடியின் உடல் சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் டாக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் அவரது உடல் வெளியே கொண்டு செல்லப்பட்டு, இன்று பிற்பகல் 2 மணிக்கு அடக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அவரது குடும்பத்தின் வேண்டுகோளின்படி, பாராளுமன்றத்தின் தெற்கு வளாகத்தில் நல்லடக்க பிரார்த்தனை நடைபெறும். பின்னர், தேசியக் கவிஞர் காசி நஸ்ருல் இஸ்லாமின் கல்லறைக்கு அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும். பொதுமக்கள் பார்வைக்கு உடலை வைக்கப்படாது என்றும், மக்கள் ஒழுங்கைப் பேணி பிரார்த்தனை செய்யுமாறும் இங்குலாப் மாஞ்சா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் எந்தவிதமான பைகள் அல்லது கனமான பொருட்களையும் கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பல்வேறு இடங்களில் இருந்து இளைஞர்கள் தலைநகர் டாக்காவில் குவிந்ததால், நகரம் முழுவதும் கடும் பாதுகாப்பு போடப்பட்டது. இதனிடையே, போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். சிலர் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவம் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களால் வங்காளதேசத்தில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.