தமிழக அரசு அறிவிப்பு – விண்வெளித் தொழில்நுட்ப புத்தொழில் நிதித் திட்டம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் விண்வெளித் தொழில்நுட்ப துறையை வலுப்படுத்தும் நோக்கில், புதிய விண்வெளித் தொழில்நுட்ப புத்தொழில் நிதித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் பயன்பெற விண்வெளித் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், தமிழ்நாட்டில் இயங்கும் விண்வெளித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு இணை பங்கு முதலீடு வழங்குவதாகும். அதன்படி, பிற முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டும் நிறுவனங்களுக்கு, அதற்கேற்ப தமிழ்நாடு அரசு அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை இணை பங்கு முதலீட்டு நிதி வழங்கும். இதன் மூலம், மாநிலத்தில் விண்வெளித் தொழில்நுட்ப சூழமைவு வலுப்பெறுவதோடு, தனியார் முதலீட்டாளர்களும் அதிக அளவில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.

விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தகுதி வாய்ந்த நிபுணர் குழுவால் மதிப்பீடு செய்யப்படும். நிபுணர் குழுவின் பரிந்துரைக்கேற்ப முதலீட்டு நிதி வழங்கப்படும். மேலும், நிதி பல்வேறு கட்டங்களாக, செயல்திறன் அடிப்படையில் வழங்கப்படும். செயற்கைக்கோள் அமைப்பு, ஏவூர்தி தொழில்நுட்பம், பூமி கண்காணிப்பு தீர்வுகள், ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான விண்வெளி பகுப்பாய்வு போன்ற துறைகளில் புதிய தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்கும் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் ஒன்றிய அரசின் DPIIT தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், வலுவான சந்தை வாய்ப்பு கொண்ட புத்தாக்கம் நிறைந்த தயாரிப்புகள் அல்லது சேவைகளை உருவாக்கும் நிறுவனமாக இருக்க வேண்டும். இந்த நிதி, மாதிரி வடிவமைப்பு, பொறியியல் வடிவமைப்பு, தொழில்நுட்ப சோதனை, ஆய்வக சோதனை, சந்தைக்கு ஏற்ற தயாரிப்பு ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படலாம். ஏற்கனவே இயங்கும் நிறுவனத்தின் பிரிவாகவோ, கூட்டு/இணை நிறுவனமாகவோ இருக்கக் கூடாது. எந்த அரசு அமைப்பினாலும் தடைசெய்யப்பட்டவர்களுக்கு விண்ணப்பிக்க அனுமதி இல்லை.

இந்த நிதியாண்டில், இத்திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் https://form.startuptn.in/TNSTF என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு StartupTN இணையதளத்தைப் பார்வையிடலாம். மேலும், கேள்விகள் இருப்பின் spacetech@startuptn.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த திட்டம், மாநிலத்தில் விண்வெளித் தொழில்நுட்ப புத்தாக்கங்களை ஊக்குவிக்கும் முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.