அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் குலுக்கல் முறை ரத்து
வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு வேலை செய்ய வழங்கப்படும் முக்கியமான எச்-1பி விசா திட்டத்தில் டிரம்ப் நிர்வாகம் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதுவரை, ஆண்டுதோறும் 85 ஆயிரம் பேருக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டு வந்தது. விண்ணப்பங்கள் அந்த எண்ணிக்கையை மீறும்போது, கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு விசா வழங்கப்பட்டது. ஆனால், இந்த நடைமுறைக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்ததால், டிரம்ப் நிர்வாகம் குலுக்கல் முறையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
எச்-1பி விசாவை பயன்படுத்துபவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்பதால், இந்த மாற்றம் இந்தியர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், எச்-1பி விசா கட்டணத்தில் அதிபர் டிரம்ப் கடுமையான உயர்வை மேற்கொண்டுள்ளார். முன்பு ரூ.1.75 லட்சமாக இருந்த கட்டணம், தற்போது 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை, விசா பெறும் பணியாளரும் அவரைப் பணியமர்த்தும் நிறுவனமும் சேர்ந்து செலுத்த வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் படி, அதிக சம்பளம் பெறும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சிறந்த பணித்திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அமெரிக்க குடியுரிமை துறை வெளியிட்ட தகவலின்படி, “தற்போதைய குலுக்கல் முறையில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. சில நிறுவனங்கள் தகுதியற்றவர்களை குறைந்த சம்பளத்தில் பணியமர்த்த இந்த முறையை தவறாகப் பயன்படுத்துகின்றன. இதனால், உண்மையான திறமை கொண்டவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். புதிய முறையால் ஆரோக்கியமான போட்டி உருவாகும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 27 முதல் அமலுக்கு வரும். இருப்பினும், இந்தியர்களுக்கு இது பாதகமாக அமையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிக சம்பளம் வழங்கும் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப மட்டுமே விசா வழங்கப்படும் நிலையில், இந்தியர்களுக்கு பாரபட்சம் காட்டப்படலாம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக விளக்கப்பட்டாலும், இந்தியர்களின் வேலை வாய்ப்புகள் குறையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய சவால்கள் உருவாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.