அமெரிக்க முன்னாள் அதிபர் Donald Trump, தென் அமெரிக்க நாடான Venezuela மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அந்நாட்டு அதிபர் Nicolás Maduro போதைப் பொருள் பயங்கரவாதத்தில் நேரடியாக ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார். வெனிசுலா வழியாக அமெரிக்காவுக்குள் அபாயகரமான போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், குற்றவாளிகள் மற்றும் சிறைக் கைதிகளை அமெரிக்க எல்லைக்குள் அத்துமீறி நுழையச் செய்கின்றதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், வேறு எந்த நாட்டைவிடவும் வெனிசுலாவிலிருந்தே லட்சக்கணக்கானோர் அமெரிக்காவின் திறந்த எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த பின்னணியில், மதுரோவின் “சட்டவிரோத ஆட்சிக்கு” நிதி ஆதரவு அளித்து வரும் எண்ணெய் கப்பல்கள் மற்றும் நிறுவனங்களை கண்டறிந்து, வெனிசுலாவின் 4 எண்ணெய் நிறுவனங்களுக்கும் அவற்றுடன் தொடர்புடைய கப்பல்களுக்கும் புதிய தடைகள் விதிக்க அமெரிக்கா உத்தரவிட்டது.
இந்த கப்பல்களையே மதுரோவின் ஆட்சி பெரிதும் சார்ந்துள்ளதாகவும், எண்ணெய் வருவாய் மூலம் அமெரிக்காவின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க கருவூலத் துறை அமைச்சர் Scott Bessent வெளியிட்ட அறிக்கையில், போதைப் பொருள் கடத்தலிலும் எண்ணெய் ஏற்றுமதியிலும் ஈடுபடும் மதுரோவின் ஆட்சியை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அமெரிக்க அட்டர்னி ஜெனரல் Pamela Bondi கூறுகையில், மதுரோ தம்பதியினர் மீது நியூயார்க் நகரில் போதைப் பொருள் கடத்தல், கொக்கைன் இறக்குமதி, ஆயுத பதுக்கல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், அவர்கள் அமெரிக்க நீதிமன்றங்களில் விசாரணை எதிர்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.
ஆனால், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வெனிசுலாவின் எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களை குறிவைத்ததே என்ற சந்தேகம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. இதே சூழலில், Colombia நாட்டின் அதிபர் Gustavo Petro மற்றும் டிரம்ப் இடையே சமீப காலமாக மோதல் நிலவி வருகிறது.
காசா போருக்கு எதிரான நியூயார்க் போராட்டத்தில், டிரம்பின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டாம் என பெட்ரோ பேசியது இரு நாடுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெட்ரோவின் விசாவை ரத்து செய்ய அமெரிக்கா திட்டமிட்டதாக தகவல் வெளியானது.
இதற்கிடையில், அமெரிக்க செனட்டர் Lindsey Graham, வெனிசுலா மற்றும் கொலம்பியா இரு நாடுகளும் போதைப் பொருள் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடமாக உள்ளதால், அவற்றின் மீது அமெரிக்க ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த அக்டோபரில், “படுகொலை முகாம்களை பெட்ரோ உடனடியாக மூட வேண்டும்; இல்லையெனில் அமெரிக்கா அதனைச் செய்யும்” என டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். டிசம்பர் தொடக்கத்தில், கொலம்பியாவில் கொக்கைன் உற்பத்தி நடைபெறுவதாகவும், அதில் பெட்ரோ கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த பின்னணியில், மதுரோ கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அடுத்ததாக கொலம்பிய அதிபர் பெட்ரோவும் அமெரிக்க நடவடிக்கையின் இலக்காவாரா என்ற கேள்வி சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.