மதுரை,
மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வந்த அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்குகிறது. தமிழர் பாரம்பரிய விளையாட்டின் அடையாளமாக விளங்கும் இந்த விழாவை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் அலங்காநல்லூரில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. வாடிவாசல் அமைப்பு, மாடுபிடி அரங்கம், பார்வையாளர்களுக்கான கேலரிகள், மருத்துவ வசதிகள், தீயணைப்பு மற்றும் அவசர மீட்பு குழுக்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும், பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இன்றைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று, மாடுபிடி வீரர்களையும் காளை உரிமையாளர்களையும் ஊக்குவிக்க உள்ளார். முதல்வரின் பங்கேற்பு காரணமாக விழாவிற்கு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 6,500 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. அவற்றில் தகுதி மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, சிறந்த 1,100 காளைகளுக்கு மட்டுமே போட்டியில் பங்கேற்க டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், சுமார் 600 மாடுபிடி வீரர்கள் இன்று களத்தில் இறங்கி தங்களது வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்த உள்ளனர்.

போட்டியில் அதிக எண்ணிக்கையிலான காளைகளை அடக்கி சிறப்பாக செயல்படும் மாடுபிடி வீரருக்கு சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பரிசு பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.

இந்த உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழாவை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் முன்பதிவு செய்து வருகை தந்துள்ளனர். விழாவை முன்னிட்டு, தென் மண்டல ஐ.ஜி. மற்றும் மதுரை காவல் கண்காணிப்பாளர் தலைமையில், 3,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழர் வீரத்தையும் பண்பாட்டையும் உலகிற்கு எடுத்துச் சொல்லும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா, இன்று மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற உள்ளது.