சென்னை:
தமிழக அரசின் வேலைவாய்ப்பு நடைமுறைகளை கடுமையாக விமர்சித்துள்ள நயினார் நாகேந்திரன், “அரசுப் பணியிடங்களை விற்று திமுக அரசு காசு குவிக்கிறதா?” என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: “தமிழக கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் நோக்கில் SRB மற்றும் DRB தேர்வுகள் நடத்தப்பட்டு நூறு நாட்கள் கடந்துவிட்டன. அதேபோல், உதவிப் பேராசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) தேர்வும் நடத்தப்பட்டு அறுபது நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை அந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பணியிடங்கள் காலியாக உள்ள நிலையிலும், தேர்வுகள் முடிந்தபின் கூட முடிவுகளை அறிவிக்காமல் தாமதப்படுத்துவது திமுக அரசின் செயல்திறன் குறைவைக் காட்டுகிறது. இத்தகைய தாமதங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது,” என்று நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: “இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவரும் இந்த வேலைவாய்ப்புகள் குறித்து அரசு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருப்பது அரசின் நோக்கம் சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த தாமதம் அரசுப் பணியிடங்கள் ‘விலை பேசப்படும் பொருட்களாக’ மாறிவிட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது,” என்றும் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், “தேர்வில் கலந்து கொண்ட இளைஞர்களின் உழைப்பையும் நம்பிக்கையையும் மதிக்காமல், அவர்களை உறுத்தும் விதமாக செயல்படுவது அரசின் பொறுப்பின்மையை வெளிப்படுத்துகிறது. உடனடியாக SRB, DRB மற்றும் TRB தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டு, தகுதியானவர்களுக்கு நியாயமான வாய்ப்பு வழங்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.