சென்னை:
தமிழக வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் இந்த வேலைநிறுத்தத்தில், வருவாய்த் துறை அலுவலர்கள், ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், நில அளவைத்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

அவர்களின் முக்கிய கோரிக்கைகளில், தொகுதி–2 தேர்வின் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு 12வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதும் அடங்கும். அதேபோல், நேரடி நியமன அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் பதவிக்கு பதவி உயர்வு பெற நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் போதுமானதாக இருக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதும் கோரப்பட்டு வருகிறது. இதைத் தவிர மொத்தம் 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக, நில அளவீடு, பட்டா மாற்றம், சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்கள் வழங்குதல் போன்ற பொதுமக்களின் அன்றாட தேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வருவாய்த் துறை ஊழியர்கள் வழக்கமான அரசு பணிகளுடன், அரசின் சிறப்பு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் பிரச்சனைகளை தீர்ப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகின்றனர். மேலும், ஆக்கிரமிப்பு அகற்றுதல், மணல் மற்றும் கனிம வளங்கள் திருட்டு தடுப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் தலையீடு போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய பணிகளில் ஈடுபடும் போது, அலுவலர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். எனவே, அவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்குதல், பணி பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துதல் போன்ற கோரிக்கைகள் நியாயமானவை என டாக்டர் எஸ். ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு அளவை 25 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்திருப்பது பொருத்தமற்றது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அதேபோல், அரசின் நிர்வாகத் துறையில் 14,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாதது தவறான நடவடிக்கையாகும் என்றும், அவற்றை விரைவாக நிரப்பி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.