அமெரிக்காவின் 500% வரி மசோதா: இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு – மு.வீரபாண்டியன் கண்டனம்

திருச்சி, ஜனவரி 9: அமெரிக்காவின் சர்வாதிகார போக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கடுமையாகக் கண்டித்துள்ளார். ரஷியாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணமகட்டி, இந்தியா மற்றும் சீனா மீது 500 சதவீதம் வரி விதிக்கும் ‘ரஷியா பொருளாதாரத் தடைச் சட்டம் 2025’ மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனவரி 7 அன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இந்த மசோதா அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதலுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சட்டமாகி விட்டால், இந்தியாவின் ஏற்றுமதி வணிகம் கடுமையாகப் பாதிக்கப்படும். ஏற்கெனவே டிரம்ப் 50 சதவீதம் வரியை இந்தியா மீது விதித்ததால், ஜவுளித்துறை உட்பட பல துறைகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. திருப்பூர் ஜவுளி ஏற்றுமதியும் கடும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இறையாண்மைக்கும், ஏற்றுமதி-இறக்குமதி கொள்கைகளுக்கும் எதிரான இந்த அமெரிக்க நடவடிக்கை, அரசியல் மற்றும் பொருளாதார மேலாதிக்கப் போக்காகும். இது கடும் கண்டனத்திற்குரியது. அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல், மத்திய பாஜக அரசு உரிய எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, இதர நாடுகளுடன் பரஸ்பர உதவி அடிப்படையிலான பொருளாதார உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டும்.

முக்கியமாக, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திப் பொருள்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உடனடி முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது. – இவ்வாறு மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.