சென்னை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 2026–27ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு–செலவு அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதை வரவேற்றுள்ளார்.

அறிக்கையில் புதிய மிகப்பெரிய திட்டங்களை அறிவிப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து வலுப்படுத்தும் நோக்கமே அதிகமாக வெளிப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு நேரடி நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது என தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதும் சமூக நலன் சார்ந்த அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதார துறைகளில் இளைஞர்கள் முன்னேற உரிய திட்டங்கள் வகுக்கப்படும் என்ற அறிவிப்பு, இன்றைய நான்காவது தொழில்நுட்பப் புரட்சியை முன்னிட்டு எடுக்கப்பட்ட சரியான முடிவாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வுகளில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பும் வரவேற்பிற்குரியது என கூறப்பட்டுள்ளது.

உற்பத்தி, சேவை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் வளர்ச்சிக்கான முக்கிய ஆதாரங்கள் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருப்பதும் நேர்மையான அணுகுமுறை என மதிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி மற்றும் உயர்கல்வித் துறைக்கு ரூ.8,005 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் கல்விக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் கல்வி கற்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 54,301 மாணவர்கள் தொழிற்கல்லூரிகளில் பயன் பெற்றிருப்பதும், அவர்களுக்கான கல்வி மற்றும் உணவுக் கட்டணங்களுக்காக ரூ.1,512 கோடி மாநில அரசு செலவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடுகளை வழங்காமல் புறக்கணித்த போதிலும், சாலை, பாலம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு பணிகளுக்கு மாநில அரசு அதிக நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டத்தக்கது. தொழிற்பூங்காக்கள் விரிவாக்கம் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கமும் அறிக்கையில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

வேளாண்மைத் துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு, குளிர்சாதன கிடங்குகள், விதை வங்கி, பாசன திட்டங்கள் மற்றும் விவசாய இயந்திர உதவி திட்டங்களுக்கு நிதி வழங்கப்பட்டிருப்பது விவசாய உற்பத்தி மேம்பாட்டுக்கு உதவும் என கூறப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கும் திட்டமும் வரவேற்கப்பட்டுள்ளது. நாகை, சிவகங்கை, கரூரில் வேளாண்மை கல்லூரிகளும், கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை கல்லூரியும் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் சிறப்பாகப் பார்க்கப்பட்டுள்ளது.

ஆனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும், அரசு துறைகளில் ஒப்பந்த மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் குறித்த அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடும் நிதிசுமைகள் மற்றும் மத்திய அரசின் புறக்கணிப்பு நிலைமையிலும், சாதாரண மக்களின் நலனை முன்னிறுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த இடைக்கால வரவு–செலவு அறிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.