அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்திருந்த பொருளாதார மற்றும் வர்த்தக கொள்கைகளுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அந்த தீர்ப்புக்குப் பிறகு, டிரம்ப் விதித்திருந்த சுங்க வரிகள் தொடருமா என்பது குறித்து சர்வதேச அளவில் சந்தேகங்கள் எழுந்தன.

அத்துடன், டிரம்ப் கடந்த 20ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்தியா உட்பட பல நாடுகளுக்கு 10 சதவீத தற்காலிக உலகளாவிய சுங்கவரி விதிக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அந்த விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்தும் முடிவையும் அவர் எடுத்துள்ளார். இதனால், அமெரிக்காவில் வர்த்தகக் கொள்கைகளில் குழப்பம் நிலவி வருகிறது.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பும், டிரம்ப் வெளியிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகளும் இணைந்து, வரி விதிப்பு தொடர்பான தெளிவின்மையை உருவாக்கியுள்ளது. பொருளாதார வட்டாரங்கள், இந்த முடிவு உலகளாவிய வர்த்தகச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளன.
தற்போது டிரம்ப் அறிவித்துள்ள தற்காலிக உலகளாவிய சுங்கவரி, 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர வாய்ப்பு உள்ளது. இந்த வரி 150 நாட்கள் மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1974ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122ன் கீழ் இந்த தற்காலிக சுங்கவரி அமல்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “அதிகாரப்பூர்வ ஆணை வெளியிடப்பட்ட பிறகே புதிய விகிதம் நடைமுறைக்கு வரும். இது குறுகிய கால நடவடிக்கையாகவே இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளிவந்ததையடுத்து, அமெரிக்காவுடன் வணிக உறவு கொண்ட நாடுகள், குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்புகள், புதிய வரி விகிதத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பொருளாதார நிபுணர்கள், இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தகச் சமநிலையை பாதிக்கக்கூடும் என எச்சரித்துள்ளனர்.