லாகூர்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள இமயமலைத் தொடரில் நிகழ்ந்த பயங்கரமான பனிச்சரிவு மற்றும் பனிப்புயலில் சிக்கி, வெளிநாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் சர்வதேச மலையேற்ற வீரர்கள் வட்டாரத்திலும், சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கீழ் உள்ள கில்கிட்-பால்டிஸ்தான் (Gilgit-Baltistan) இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘போர்ட் பீக்’ (Broad Peak) சிகரத்தில்தான் இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. உலகின் 14-வது மிக உயரமான மலைச்சிகரமாகக் கருதப்படும் இந்த போர்ட் பீக் சிகரத்தில் சாகசம் புரியவும், உச்சியை அடையவும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், தொழில்முறை மலையேற்ற வீரர்களும் ஆண்டுதோறும் வருகை தந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று வழக்கமான மலையேற்றப் பணிக்காகப் போர்ட் பீக் சிகரத்தின் உச்சிக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த 10 பேர் கொண்ட மலையேற்ற வீரர்கள் குழுவினர் தீவிர முயற்சியுடன் மலையேறத் தொடங்கினர். இந்தக் குழுவில் மலையேற்றத்தில் அதிக அனுபவம் வாய்ந்த 5 பேர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுடன் பாகிஸ்தான், ஓமன், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு சில வீரர்களும் இந்த சாகசப் பயணத்தில் இணைந்துள்ளனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்த வீரர்கள் குழுவினர் போர்ட் பீக் சிகரத்தின் உச்சியை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருந்தபோது, அங்கு எதிர்பாராத விதமாகப் பயங்கரமான பனிப்புயலும் பனிச்சரிவும் ஏற்பட்டது. இந்த திடீர் இயற்கைப் பேரிடரில் தப்பிக்க வழியின்றி, மலையேற்ற வீரர்கள் அனைவரும் பனிமலை இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். பனிப்புயலின் வேகம் அதிகமாக இருந்ததால், அந்த இடத்திலேயே 10 வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், அப்பகுதிக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மற்றும் பேரிடர் மீட்பு அதிகாரிகள் உடனடியாகத் தீவிர மீட்புப் பணிகளைத் தொடங்கினர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தேடுதலில், இதுவரை பலியான மலையேற்ற வீரர்களில் 4 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. பனிச்சரிவில் ஆழமாகப் புதைந்துள்ள எஞ்சிய வீரர்களின் உடல்களைத் தேடும் பணியும், மீட்பப் பணிகளும் தற்போது தீவிரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உலக நாடுகளைச் சேர்ந்த திறமையான மலையேற்ற வீரர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த இந்தச் சம்பவம் மலையேற்ற ஆர்வலர்களைக் கண் கலங்க வைத்துள்ளது.