ஐரோப்பிய ஆயுதங்களால் இந்தியா தாக்கப்படுகிறது: பின்லாந்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காட்டம்
எல்சிங்கி: சர்வதேச அரசியல் சூழல் குறித்தும், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி விவகாரங்கள் குறித்தும் பின்லாந்து நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்கள் மூலம் இந்தியா பல ஆண்டுகளாகத் தாக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பின்லாந்து நாட்டிற்கான அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு நடைபெற்ற சர்வதேச சூழல் குறித்த விவாத நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார். அந்த நிகழ்வில் பின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆகியோர் உடனிருந்தனர். இந்த மேடையில் இந்தியா மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ஜெய்சங்கர் தனது கருத்துகளை முன்வைத்தார்.
எரிசக்தி கொள்முதல் குறித்துப் பேசிய அவர், “இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது என்பது முற்றிலும் இந்தியாவின் தேவை, கையிருப்பு மற்றும் சர்வதேச சந்தை விலையின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு. இதில் அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை. உண்மையில், கடந்த காலம் வரை ஐரோப்பிய நாடுகள் தான் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தன. அந்த நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கியதால், இந்தியா தனது தேவைகளுக்காக ரஷ்யாவை நாடியது. இது முழுக்க முழுக்கச் சூழலைப் பொறுத்து எடுக்கப்படும் பொருளாதார முடிவாகும்” என்று தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து ஆயுத விநியோகம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசுகையில், அமைச்சர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “ஒரு முக்கியமான உண்மையை ஐரோப்பிய நாடுகள் உணர வேண்டும். இதுவரை எந்தவொரு ஐரோப்பிய நாடும் இந்திய ஆயுதங்களால் தாக்கப்பட்டது கிடையாது. இந்தியாவைப் பொறுத்தவரை மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தச் செயல்களிலும் ஈடுபடுவதில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகள் விற்கும் ஆயுதங்களைக் கொண்டு இந்தியா தொடர்ந்து தாக்கப்படுகிறது. இது கடந்த சில ஆண்டுகளாக நடக்கும் நிகழ்வு மட்டுமல்ல, பல தசாப்தங்களாகத் தொடரும் ஒரு கசப்பான உண்மை” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச அளவில் ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகள், அவை யாருடைய கைகளுக்குச் சென்று சேருகின்றன என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருந்து தவறிவிடுகின்றன என்பதை அமைச்சரின் உரை கோடிட்டுக் காட்டியது. ஐரோப்பிய நாடுகளின் இந்தச் செயல்பாடுகள் இந்தியாவின் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக இருப்பதை அவர் வெளிப்படையாகக் கண்டித்தார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா எந்த அளவுக்குத் தெளிவாகவும், உறுதியுடனும் செயல்படுகிறது என்பதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் இத்தகைய முரண்பாடான செயல்பாடுகளை, சர்வதேச மேடையில் ஒரு இந்திய அமைச்சராக ஜெய்சங்கர் மிகக் கடுமையாகவும், அதே சமயம் அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளார். இந்தியத் தரப்பு முன்வைத்துள்ள இந்த நியாயமான வாதம், எதிர்காலத்தில் சர்வதேச ஆயுத வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.