மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், மயிலாப்பூர் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் DMK வேட்பாளர் தா.வேலுவின் தனி உதவியாளராக உள்ள சத்தியமூர்த்தி வீட்டில், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் இன்று அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பேக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் கைப்பற்றப்பட்டன. மொத்தம் ரூ.2 கோடி வரை ரொக்கம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
பணத்தை எண்ணுவதற்காக அதிகாரிகள் சிறப்பு இயந்திரங்களையும் கொண்டு வந்தனர். பணம் மட்டுமின்றி, வாக்காளர் பட்டியல், முக்கிய டைரிகள் மற்றும் தேர்தல் தொடர்பான சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கட்சி நிர்வாகிகளுக்கு பணம் விநியோகம் செய்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழலில், இந்த சம்பவம் மயிலாப்பூர் தொகுதியில் மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.