திருநெல்வேலியில் தாய் இறந்த துயரத்தில் வாலிபர் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் சக்திநகர் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் என்ற விஜி (25) தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர், தாயார் அமுதவள்ளியுடன் வசித்து வந்தார். மேலும், அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் 9-ஆம் தேதி அமுதவள்ளி மரணமடைந்தார். தாயார் இறந்த துயரத்தில் வேலாயுதம் அக்கம் பக்கத்தினருடன் பேசாமல், மன வருத்தத்துடன் இருந்தார். நேற்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அப்பகுதியினர் கவனித்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, வேலாயுதம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

முதற்கட்ட விசாரணையில், தாயார் இறந்த துயரத்தால் வேலாயுதம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இருப்பினும் வேறு காரணங்கள் உள்ளனவா என்பதை பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.