இந்திய விண்வெளி துறையில் புதிய சாதனை: எல்.வி.எம்-3 மூலம் 6 டன் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது
புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தொடர்ந்து உலகளவில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறது. பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதில் இஸ்ரோ ஏற்கனவே சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளது. இந்நிலையில், அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை முதன்முறையாக விண்ணில் செலுத்தி, இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி துல்லியமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 6 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது, இந்திய விண்வெளி திறனின் வளர்ச்சியை உலகிற்கு மீண்டும் நிரூபித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்திய விண்வெளித் துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோளான ‘புளூபேர்ட்’ LVM3-M6 ராக்கெட் மூலம் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது, இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் பெருமைமிக்க மைல்கல்லாகும்,” எனக் குறிப்பிட்டார்.
மேலும், வணிக ரீதியில் ராக்கெட்டுகளை ஏவுவதில் இந்தியா உலக சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாகவும், இது வளர்ச்சி அடைந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை நோக்கிய முயற்சிகளின் பிரதிபலிப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார். இஸ்ரோவின் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி மேலும், “இந்திய இளைஞர்களால் இயக்கப்படும் நமது விண்வெளித் திட்டம் மிகவும் மேம்பட்டதாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மாறி வருகிறது. எல்.வி.எம்-3 ராக்கெட் செயல்திறனை வெளிப்படுத்துவதன் மூலம், ககன்யான் போன்ற எதிர்காலப் பணிகளுக்கான அடித்தளங்களை வலுப்படுத்துகிறோம். வணிக ஏவுதள சேவைகளை விரிவுபடுத்துகிறோம். இந்த அதிகரித்த திறனும் தன்னம்பிக்கையும் வரும் தலைமுறைகளுக்கு அற்புதமான ஊக்கமாக இருக்கும்,” எனக் குறிப்பிட்டார்.
இந்த சாதனை, இந்தியாவின் விண்வெளி துறையில் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.