அதிமுக–பாஜக ஆலோசனையில் விஜய் குறித்த விவாதம்
சென்னை,
தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் சூழ்நிலை தீவிரமாகி வருகிறது. கூட்டணி நகர்வுகள், விருப்ப மனுக்கள் தாக்கல், பிரசாரத் திட்டங்கள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றன. இதனால், தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்து, அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது.
இந்த சூழலில், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய வர்த்தக மற்றும் தொழில் மந்திரி பியூஷ் கோயல் இன்று சென்னை வந்தார். அவர் தியாகராயகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சட்டமன்ற தேர்தல் பணிகள், கள நிலவரம், வெற்றி வாய்ப்பு, வாக்காளர்களை அணுகும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து, சென்னை லீலா பேலசில் பியூஷ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். சுமார் ஒன்றரை மணிநேரம் நீண்ட இந்த சந்திப்பில் தொகுதி பங்கீடு தொடர்பான விவாதம் நடைபெற்றது. பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை மந்திரி எல். முருகன், அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையில் பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அதிமுக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டணி பலப்படுத்துவது, புதிய கட்சிகளை இணைப்பது, தேர்தல் பிரசாரத்தில் ஒருங்கிணைப்பு செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தரப்பும் விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பா.ஜ.க.க்கு 30–40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என பியூஷ் கோயல் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த ஆலோசனையில் நடிகர் விஜய் குறித்து பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமியுடன் விவாதித்ததாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன. தவெக வாக்குகள் தே.ஜ. கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. தரப்பில் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆலோசனை கூட்டம் முடிந்த பின், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக அவர் தெரிவித்தார். ஆனால், பா.ஜ.க. சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து பதில் அளிக்காமல், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.