நியூயார்க்: சீனாவின் ஜியான்சு மாகாணத்தில் பெங்குவாங் மலை உள்வரையிலுள்ள பாரம்பரிய கோயில்களில், வென்சாங் பெவிலியன் கடந்த 12-ம் தேதி புதன்கிழமை தீயில் எரிந்து சாம்பலானது.

இதற்கான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்த கோயில் கடந்த 2009-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

சீன இலக்கியம், கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் அந்தக் கோயில் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தக் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

அங்கு மெழுகுவர்த்தி மற்றும் ஊதுபத்தி ஏற்றுவது வழக்கமாக உள்ளது. அதன்படி, கடந்த 12-ம் தேதி சுற்றுலா பயணிகள் மெழுகுவர்த்தி மற்றும் ஊதுபத்திகளை கொளுத்தி வைத்துள்ளனர். தீப்பிடிக்கும் அபாயம் உள்ள இடத்தில் அவற்றை வைத்ததாலேயே கோயிலில் தீப்பற்றியது என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.