கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை 340 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வழியாகவும் நெடுஞ்சாலை ஓரமாக இந்த குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் நிலையில், இருகூூரிலிருந்து முத்தூர் வரையிலான 70 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய்களைப் பதிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இது அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் நலன்களுக்கும் முற்றிலும் எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளைநிலங்களில் குழாய் பதிக்கும் இந்தத் திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்களின் எதிர்ப்பையும் மீறி, காவல்துறையின் பாதுகாப்புடன் நேற்று விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டுள்ளன. இதைக் கண்டித்தும், இப்பணிகளை உடனடியாகக் கைவிடக் கோரியும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வேலம்பட்டி டோல்கேட் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டனர். விளைநிலங்களில் குழாய் பதிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், நெடுஞ்சாலை வழியாக மட்டுமே குழாய்களைப் பதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி திருப்பூர் – தாராபுரம் பிரதான சாலையில் அவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்படும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் நலன்களைப் பாதிக்கக்கூடிய வகையில் விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் உடனடியாகக் கைவிட வேண்டும். மாற்றுவழியாக நெடுஞ்சாலை வழியாக மட்டுமே குழாய் பதிக்கும் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.